தென்றல்

என் மதியில் எழும் எண்ணங்களை எழுத்துருவில் பதிப்பதற்கான முயற்சி....

Friday, March 17, 2006

கவிதைப் புதிர்

மீபத்தில் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்த போது, அங்கே ஓர் பழைய [2003ம் ஆண்டு] தேவி வார இதழ் கண்ணில் பட்டது. அவ் இதழில் ஓர் புதிர் போட்டிருந்தார்கள்.அதாவது, ஓர் கவிதையைப் பிரசுரித்து, அதன் கீழ் மூன்று கவிஞர்களின் பெயரையும் கொடுத்து, இம் மூன்று கவிஞர்களில் குறிப்பிட்ட கவிதயைப் புனைந்தவர் யார் என வினவியிருந்தார்கள் [multiple-choice question].

னக்கு விடை தெரியவில்லை. யார் இக் கவிதையை புனைந்தவர் என அறிய வேண்டும் எனும் ஆர்வமும், ஆவலும் எனைத் தூண்ட, அத் தேவி இதழை முன் அட்டையில் இருந்து பின் அட்டை வரை பக்கம் பக்கமாக வரிக்கு வரி தேடினேன். விடை கிடைக்கவில்லை. மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. நண்பனிடம் கேட்டேன். அவருக்கும் விடை தெரியவில்லை. வழமையாக, தேவி வார இதழ் இப்படியான புதிர்களைப் பிரசுரிக்கும் போது, புதிருக்கான விடையையும் ஏதாவது ஒரு பக்கத்தில் பிரசுரிப்பார்கள். இம் முறை வேண்டும் என்றே விடையை பிரசுரிக்காமல் விட்டார்களா, அல்லது தவறுதலாக விட்டார்களா என்பது புரியவில்லை.

இதோ அப் புதிரை[கவிதையை] இங்கே இணைக்கிறேன். இக் கவிதயைப் படைத்தவர் யாரென உங்களுக்கு தெரிந்தால், தயவு செய்து தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். முன் கூட்டியே உங்களுக்கு என் நன்றிகள் [Thanks in Advance].


கல்லைக் கனியாக்கும் கட்டழகு எங்கேடி!

தொட்டால் ஒரு சுவையும்
தொடப்போமுன் ஓர் சுவையும்
கிட்டத்து நின்றால்
கிளர்ச்சி தரு ஓர் சுவையும்
பார்க்கும் விழிக் கூட்டுப்
பார்வைக்கு ஓர் சுவையும்
சேர்த்துப் பிறந்த
திருமேனி எங்கேடி!

முன்னடிக்குப் பாதி உயிர்
முத்தாகத் தூக்கி வைக்கும்
பின்னடிக்குப் பாதி உயிர்
பெறும் பாதம் எங்கேடி!

முல்லைப் பூப்போல்
முறுவல் தவழ்ந்தாடக்
கல்லைக் கனியாக்கும்
கட்டழகு எங்கேடி!

[1]வாலி
[2]கண்ணதாசன்
[3]வைரமுத்து

மூவரில் ஒருவர் எழுதிய கவிதை. யார் அவர்?

[நன்றி : தேவி, 26-02-2003, பக்கம் : 11]

2 Comments:

At 6:28 PM, Anonymous கீதா said...

வாலி எழுதி இருப்பாரோ என்று ஒரு சந்தேகம்.

வைரமுத்து/கண்ணதாசன் இருக்காது என்று நினைக்கிறேன்.

அன்புடன்
கீதா

 
At 1:21 AM, Blogger Naarathar said...

கீதா,
வணக்கம்.
தங்களுடைய பதிவுக்கு நன்றி.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி
இருப்பார் என்பது தான் என் ஊகம்.
அவருடைய பல படைப்புகளை படித்திருக்கிறேன். அதனால், இது கவியரசரின் பாணி [style] போல
இருப்பதகவே நினைக்கிறேன். அதிகமாக
அவர் தான் 'டி' , 'டா' எனும் சொற்களை உணர்வு பூர்வமாக கையாள்பவர். எடுத்துக் காட்டாக,
"போனால் போகட்டும் போடா",
"சட்டி சுட்டதடா", "என்னுயிர்த் தோழி
கேளடி ... " , போன்ற அவரது பாடல்களைக் குறிப்பிடலாம்.

 

Post a Comment

<< Home