தென்றல்

என் மதியில் எழும் எண்ணங்களை எழுத்துருவில் பதிப்பதற்கான முயற்சி....

Thursday, March 16, 2006

கண் திறப்பார்களா?

"விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ "
-'மகாகவி' சுப்பிரமணிய பாரதியார்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கால கட்டத்தில், இந்தியா பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. அப்போது பல தமிழர்களை ஆசை வார்த்தை காட்டியும், வலுக் கட்டாயமாகவும் கூலி வேலை செய்வதற்காக உலகின் பல நாடுகளுக்கு அழைத்துச் சென்று [இழுத்துச் சென்று அல்லது ஏற்றுமதி செய்து எனும் சொற்களைப் பாவிப்பதே சரியாக இருக்கும் என நம்புகின்றேன்] அவ்வவ் நாடுகளில் குடியமர்த்தினார்கள் பிரித்தானியர்கள். இப்படியாக இந்த நாடுகளில் குடியேற்றப் பட்ட தமிழர்கள் அந்த நாடுகளில் அனுபவித்த துன்பங்களை, அவலங்களை சொல்லியடங்காது. பலர் கொலரா போன்ற கொடுங் கூற்றுக்கிரையானார்கள். சிலர் பயணிக்கும் போதே கப்பலில், நடுக் கடலில் செத்து மடிந்தர்கள். சிலர் கை, கால் விலங்கிடப்பட்டு கொண்டு செல்லப் பட்டமையால் வேதனையால் மாண்டார்கள். [ ஜயகோ! என்னே கொடுமை ! இதை எழுதும் போது என் இதயமே நின்று விடும் போலிருக்கிறதே! ] இந்த குடியேற்றப் பட்ட நாடுகளில் தமிழ்ப் பெண்கள் அடைந்த துன்பங்களை விவரிக்க முடியாது. சிலர் குடும்பத்தை பிரிந்த துயரினால் உயிர் பிரிந்தனர். பலர் கற்பு அழிக்கப் பட்டதனால் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இவர்கள் பட்ட இன்னல்களை மகாகவி பாரதி மூலமே கேளுங்கள்:

"... ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழ்ச் சாதி, தடியடி யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்..."

எம் இனம் பட்ட இன்னல்களைக் கேள்வியுற்று மனம் நொந்து ஏதும் செய்ய முடியாத நாதியற்ற நிலையில் தன் குல தெய்வத்திடம் நீதி கேட்கிறார் பாரதியார்.

"... ஏழைகள் அங்கு சொரியுங்கண் ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ?"

...

"... கண்ணற்ற தீவினிலே... அவர்
விம்மி விம்மி விம்மி விம்மிய ழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டும் உரையாயோ? "

...

"... அவர்
விம்மி யழுவுந் திறங்கெட்டுப் போயினர்
நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? ஹே !
வீர காளி, சாமுண்டி காளீ !"

இச் சம்பவங்கள் நடந்தது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் தமிழனைச் சூழ்ந்து கொண்ட துன்பம் இன்னும் அகலவில்லையே! அன்று சென்ற இடங்களில் தான் தமிழர் நிம்மதி இழந்தார். ஆனால் இன்று சொந்தக் கொல்லையில் அல்லவா தமிழர் துன்புறுகின்றார். ஆம், நான் இங்கே குறிப்பிடுவது தமிழக மீனவர்களை. கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற மூன்று தமிழக மீனவர்களைக் கைது செய்து துன்புறுத்தியுள்ளது சிறீலங்காவின் சிங்கள கடற் படை. 1983 ம் ஆண்டு முதல் இன்று வரை 357 தமிழக மீனவர்கள் சிங்கள கடற் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடோ அல்லது எதுவித உதவியோ யாராலும் வழங்கப்படவில்லை. இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள் சிறீலங்காச் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர் என்பது சரியாகத் தெரியாது.

மீனவர்களின் இன்னல்களை ஏன் இன்னும் மத்திய , மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன? தமிழினத் தலைவர் என்றும், தமிழினக் காவலர்கள் என்றும் மேடைக்கு மேடை மார்பு தட்டும் அரசியல்வாதிகளுக்கு இம் மீனவர்களின் துயரங்கள் தெரியாதா? பார்ப்பனர்கள் கொல்லப்பட்டால் முன் பக்கச் செய்தியாகப் பிரசுரிக்கும் இந்து [Hindu] போன்ற பத்திரிகைகளுக்கு இவ் வறிய மீனவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா? மத்திய அரசு தமிழக மீனவர்களை இந்தியர்களாகக் கருதவில்லையா? சிங்களக் கடற் படைக்கு பயிற்ச்சிகளும், ஆயுதங்களும் வழங்கும் மத்திய அரசு, தமிழக மீனவர் கொலைகளுக்கு சிங்கள அரசைக் கண்டிக்காதது ஏன்? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்? இனி மீனவர்களும் தமெக்கென கட்சியமைத்து வீதியில் இறங்கினால் தான் மாநில , மத்திய அரசுகள் கண்டு கொள்ளுமா? இவர்கள் கண் திறப்பதற்கு இன்னும் எத்தனை மீனவர்கள் இறக்க வேண்டும்?

தமிழக மீனவர்களின் இன்னல் கண்டு மனம் வருந்தி ஈழத்துக் கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் என்பவர் 2001ம் ஆண்டில் வடித்த கவிதை இதோ.

எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ?

வங்கக் கடல் அலையே
மாரடித்துக் கதறினையோ
இமய முகட்டிலும் போய்
இடித்துக் கண் வடித்தாயோ
நாதியற்ற தமிழகத்து மீனவர்கள்
சேதுக் கடலில் சிந்திய செங்குருதி
கங்கை வடி நிலத்தில்
கொட்டி அரற்றினையோ
இவர்களும் இந்தியரே
என்று வடபுலத்து
மன்னர் உணரவென
வாய் விட்டு அழுதாயோ.

இந்தியன் தமிழன்
என்பதனால் மீனவர் நீர்
சிங்களத்துப் படைகளுக்குச்
சிறு புழுவாய்ப் போனீரோ
அதனால் கேட்பார் இலி நாய் போல
தினந்தோறும் உமைச்
சுட்டுச் சேதுக் கடல் எறிவான்.

முன்னர் ஒரு தடவை
இலங்கைக் கடற் படையை
கட்டி இழுத்து வந்தார்
இராமேஸ்வரக் கரையில் சிறை வைத்தார்
அந்நாளில்
உங்கள் மேல் கைவைக்க அவர்கள்
இரண்டு தரம் யோசித்தார்
அன்று மீனவரே நீங்கள்
இந்தியர் தமிழரென
தலை நிமிர்ந்தீர் கடல்களிலே

ஒன்றல்ல இரண்டல்ல
206 பிணம் வீழ்ந்தும் உங்களுக்காய்
ஏனென்று கேட்க
தலைவரென இன்று
இலையோ தமிழகத்தில்.
உங்களைக் காக்க
டெல்கியிலும் எவரிலையோ.

சென்னைச் சிற்றரசர் அரசியர்க்குத்
தமிழன் யார்
டெல்லிப் பேரரசருக்கு
இந்தியன் யார்
பெரும் வாக்கு வங்கி உள்ள
சாதிகளைச் சேர்ந்தவர்தான்.
தனிக் கட்சி கட்டவல்ல
சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
உங்களுக்கோ வாக்கு வங்கி
ஒன்றும் பெரிதில்லை

அதனால் கொன்றாலும் ஏனென்று
குரல் கொடுக்க யாருமில்லை.

தமிழகமே உனக்குத்
தன்னாட்சி எதற்காக
இந்தியாவே உனக்குப்
படை அணிகள் எதற்காக
சேதுக் கடலை
மேலும் தமிழகத்து மீனவரின்
இடு காடாய் ஆக்கவென்றா
சிங்களத்துக் கடற்படைக்கு
டெல்லியே நீ போய்
போர்க் கப்பல் பரிசு தந்தாய்.

தமிழகத்து மாகவிகாள்
தலைமைக் கலைஞர்காள்
படை வந்து அன்னியர் உம்
பல் நூறு ச்கோதரரை
கொல்கின்ற போதும்
குரல் கொடுக்க மாட்டீரோ
கல் நெஞ்சோ உங்கள்
கடற் கரையில் எந்நாளும்
தாலி அறுத்து
தமிழ்ப் பெண் அழ விதியோ.

0 Comments:

Post a Comment

<< Home