தென்றல்

என் மதியில் எழும் எண்ணங்களை எழுத்துருவில் பதிப்பதற்கான முயற்சி....

Thursday, March 16, 2006

தமிழ்த் திரை இசையில் இலக்கியம் - 1

திரை[சினிமா] மிகவும் பிரபல்யமான ஊடகமாக இருப்பதால் திரையிசைப் பாடல்கள் மிகவும் எளிதாக மக்களைச் சென்றடைகிறது. திரையிசைப் பாடல்கள் சகல தரப்பு மக்கள் மத்தியிலும் [ படித்தவர்கள் , மற்றும் பாமர மக்கள்] சுலபமாக பிரபல்யமாகி விடுகின்றது. மறைந்த முதல்வர் இராமச்சந்திரன் அவர்கள் தமிழகத்தின் ஆட்ச்சியைக் கைப்பற்றுவதற்கு அவரது திரைப் படங்களும் அவரின் படங்களில் வந்த பாடல்களும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஒருவரை அரியாசனத்தில் ஏற்றக் கூடிய அளவிற்கு திரையிசைப் பாடல்கள் எமது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் அது மிகையாகாது. தமிழ்த் திரையிசை உலகம் திறமை மிக்க பல கவிஞர்களை எமக்கு தந்துள்ளது. குறிப்பாக 'கவியரசு' கண்ணதாசன், 'பட்டுக்கோட்டை' கல்யாணசுந்தரம், மருதகாசி, 'உடுமலை' நாரயண கவி, 'நாமக்கல்' இராமலிங்கம் போன்றோரை இங்கே குறிப்பிடலாம். இம் மகான்கள் எல்லோரும் காலத்தால் அழியாத, சாகாவரம் பெற்ற, இலக்கிய நயம் வாய்ந்த பாடல்கள் பலவற்றை எமக்கு அளித்துள்ளனர். அவற்றில் சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே அடியேனின் நோக்கம்.
லக்கியத்தை அக இலக்கியம் புற இலக்கியமென இரு வகையாக எம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். புற இலக்கியம் என்பது அரசாட்ச்சி, போர் என்பவற்றை வர்ணிப்பது. அக இலக்கியம் என்பது குடும்பம், காதல் என்பவற்றை விபரிப்பது. தமிழ் மொழியில் அதிகமான இலக்கிய நூல்கள், காவியங்கள், கவிதைகள் அக இலக்கியம் சார்ந்தனவாகவே உள்ளன. வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளில் கூட அரைவாசிக்கும் மேற்ப்பட்ட குறள்கள் அக இலக்கியம் சார்ந்தவையே. அக இலக்கியத்தில் முக்கியமான அம்சங்களில் 'ஊடல்' ஒன்றாகும். ஊடல் என்பது காதலர்களுக்குள் எழும் செல்லக் கோபம். ஊடல் என்பது காதல் இன்பத்தை மேலும் அதிகரிப்பது. ஊடல் இல்லாத காதலோ , ஊடல் இல்லா கணவன் மனைவி உறவோ, உப்பில்லாத பண்டத்திற்கு ஒப்பானது என்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம். [ இதைப் படித்து விட்டு ஊடல் புரிய வேண்டுமென்று உங்கள் கணவன்/மனைவியிடமோ அல்லது காதலன்/காதலியிடமோ சண்டையிட்டு விவாகரத்திலோ காதல் முறிவிலோ முடிந்தால் அடியேன் எவ் விதத்திலும் பொறுப்பாளி இல்லை என்பதையும் இங்கே மிகப் பணிவன்புடன் குறிப்பிட விரும்புகிறேன்].
ஊடல் பற்றி செந்நாப்போதர் என்ன சொல்கிறார் பாருங்களேன்.
"இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு"

இக் குறளுக்கு கலைஞர் மு. கருனாநிதி தரும் விளக்கம்:

"எந்த தவறும் இல்லாத நிலையிலும் கூட காதலர்க்கிடையே தோன்றும்ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது."


இதோ ஊடல் பற்றிய இன்னொரு குறளும் கலைஞர் மு. க அவர்களின் விளக்க உரையும்.
"புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து."

"நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?"


இந்த ஊடலுக்கு அக இலக்கியத்தில் முக்கிய இடமுண்டு. காதலில், கணவன் மனைவி உறவில் ஊடல் சுவையேற்றுவது. இதோ காதலர்க்கிடையே இடம்பெறும் ஊடலை வள்ளுவன் வாய்மொழியாகவே கேளுங்கள்.
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

கலைஞர் மு.கருனாநிதியின் விளக்கம்:

"தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ, 'யார் உம்மை நினைத்ததால் தும்மினீர் 'என்று கேட்டு முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்"


"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று "

கலைஞர் மு.க அவர்களின் விளக்கம்:

"ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்."


சரி, காதலில் மிகவும் சுவாரசியமான அம்சமான ஊடலை திரையிசைக் கவிஞர்கள் எப்படி வர்ணிக்கின்றார்கள் என்று பார்ப்போம். 'கவியரசு' கண்ணதாசன் அவர்கள் தமிழ்த் திரை உலகில் தனெக்கென தனி முத்திரை பதித்தவர். அவரது பாடல்கள் முக்கனியின் சுவை போன்றவை. இதோ 'கவியரசு' கண்ணதாசன் எண்ணத்தில் உதித்த இலக்கிய நயம் வாய்ந்த ஊடற் பாடல் ஒன்று.


நிலவைப் பெண்ணாகவும், குளிர்மையானதாவும் தான் கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். நிலவு குளிர்மையானதென்றால் , அந்த நிலவுக்கு யாரையாவது வெப்பத்தால் சுட்டெரிக்கும் தன்மை உள்ளதா? இல்லை. ஆனால் இங்கே கவியரசர் குறிப்பிடும் காதலர்கள், தமது காதல் துணையை சுட்டெரிக்கும் வண்ணம் நிலவிடம் விண்ணப்பிக்கின்றாகளே? இது சாத்தியமா? இல்லை. நிலவு இதம் தருமே தவிர வதை செய்யாது. உண்மையான காதலர்கள் தமது காதல் துணைக்கு கனவிலே கூட துன்பம் நினைக்கார். அதனால் தான் அவர்கள் தமது காதலரை சுட்டெரிக்கும் படி சூரியனிடம் கோரவில்லை. இதைத் தான் ஊடல் என்பது. இதோ அந்தப் பாடல்:


" அத்திக்காய் காய் காய்
ஆலங் காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ
என்னைப் போல் பெண்ணல்லவோ?"

அத்திக்காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக[காதலன் நிற்கும் பக்கம்] இத்திக்காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்] ஆல் = தொலைவு, அதிக தூரம், அங்கே

அங்கே காயும் நிலவே, நீயும் என்னைப் போல ஒரு பெண்தானே,ஆகவே, இந்த்தப் பக்கமாக [நான் நிற்கும் பக்கம்] வந்து என்னைச் சுடாதே. என் காதலர் நிற்கும் பக்கம் சென்று அவரைச் சுடு.


எவ்வளவு அருமையான பாடல் பாருங்களேன். எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல். 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்து வெளி வந்த 'பலே பாண்டியா' என்ற படத்தில் இடம் பெற்ற இப் பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இசை அமைத்துள்ளார்கள். மெல்லிசை மன்னர்களின் இசையை வர்ணிப்பதற்கு தமிழில் வார்த்தைகள் உண்டோ? இவ் இனிமையான பாடலின் முழுமையான எழுத்துருவம் இதோ:


காதலி :

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ
என்னைப் போல் பெண்ணல்லவோ


காதலன்:

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே - என்
உயிரும் நீயல்லவோ


காதலி :

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்


காதலன் :

மாதுளங்காய் ஆனாலும்
என் உளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


காதலன்:

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்


காதலி :

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


காதலி:

ஏலக்காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகப் போல்
தனிமை இன்பம் கனியக்காய்


காதலன் :

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


காதலன்:

உள்ளமெலா மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ


காதலி :

கோதை எனைக் காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா


காதலன்:

இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

.

2 Comments:

At 2:53 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

//அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய் //

காய்கறி பேர்போல இருந்தாலும் அர்த்தம் ஆழமானது.

அவரை + காய்
கோ + வை + காய் கோ என்றால் அரசன். மங்கை எந்தன் கோ(அரசனை) காய்.

அருமையான துவக்கம். இந்தப் பாடலில் இன்னும் விளக்கப் பல இலக்கிய நயங்கள் இருக்கின்றன.

 
At 3:29 PM, Blogger Naarathar said...

சிறில்,
தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி.

>>> காய்கறி பேர்போல இருந்தாலும் அர்த்தம் ஆழமானது <<<

சொன்னா நம்ப மாட்டிங்க, நான் சிறு பையனாக இருந்தப்போ , இப் பாடல் ஏதோ காய் கறிகளைப் பற்றிய பாடல்
என்று தான் எண்ணியிருந்தேன். இப்போது நினைத்தாலும் சிரிப்புப்தான்
வரும்.

>>>அருமையான துவக்கம். இந்தப் பாடலில் இன்னும் விளக்கப் பல இலக்கிய நயங்கள் இருக்கின்றன<<<

நிச்சயமாக.

 

Post a Comment

<< Home